Saturday, July 20, 2024
World

ரஷ்யா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு: அதிபர் புதினுடன் இன்று பேச்சுவார்த்தை | Red carpet welcome for PM Modi in Russia


புதுடெல்லி: இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைபயணமாக நேற்று மாஸ்கோ சென்றடைந்தார். விமான நிலையம் சென்றடைந்த அவரை அந்நாட்டு மூத்த துணைப் பிரதமர் டெனிஸ் மான்டுரோவ் வரவேற்றார். பின்னர் அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி ராணுவ மரியாதையும் சிவப்புகம்பள வரவேற்பும் வழங்கப்பட்டது.

பின்னர் பிரதமர் மோடியும் மாண்டுரோவும் ஒரே காரில் அங்கிருந்து ஓட்டலுக்கு சென்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யா சென்றிருந்தபோது அந்நாட்டு துணைப் பிரதமர் அவரை விமான நிலையத்தில் வரவேற்றார். ஆனால்துணைப் பிரதமரைவிட மூத்தவரான மாண்டுரோவ் பிரதமர்மோடியை வரவேற்றார். இதன்மூலம் இந்தியாவுடனான நட்புறவுக்கு ரஷ்யா எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை உணர முடியும்.

இதையடுத்து பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரவு விருந்து அளித்தார். அப்போது இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வமற்ற வகையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பிராந்திய மற்றும் சர்வதேசவிவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

22-வது உச்சி மாநாடு: இரண்டாம் நாளான இன்று பிரதமர் மோடி தொழிலதிபர்கள், மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களுடன் கலந்துரையாட உள்ளார். பிரதமர் மோடியை பார்க்க இந்தியர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். இதையடுத்து, இந்தியா, ரஷ்யா இடையிலான 22-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் இரு தலைவர்களும் தனியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளனர். பின்னர் இரு தலைவர்களின் தலைமையில் இருதரப்பு பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அப்போது இரு நாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து ரஷ்ய பயணத்தை முடித்துக் கொள்ளும் பிரதமர் மோடி ஆஸ்திரியா தலைநகர் வியன்னா செல்கிறார்.

ரஷ்யா புறப்படும் முன்பு பிரதமர்மோடி எக்ஸ் தளத்தில், “ரஷ்யாவில் நடைபெறும் 22-வது உச்சிமாநாட்டில் பங்கேற்க அந்நாட்டுக்கு செல்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் எரிசக்தி, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி,கலாச்சாரம், சுற்றுலா மற்றும்மக்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

என் நண்பர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தவும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்த கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் ஆவலாக உள்ளேன்.

ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு ஆஸ்திரியா நாட்டுக்கு முதல்முறையாக செல்ல உள்ளேன். நீண்டகாலமாக நட்பு பாராட்டி வரும் இந்த இரு நாடுகளுடனான உறவை பலப்படுத்த இந்த பயணம் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்” என கூறப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அந்நாட்டு அரசின் விஜிடிஆர்கே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “இந்திய பிரதமரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். அவரது வருகை இருநாடுகளின் உறவை மேம்படுத்துவதற்கு மிகவும் அவசியமானது. இந்திய பிரதமர் மோடியின் வருகையை மேற்கு நாடுகள் பொறாமையுடன் உன்னிப்பாக கவனித்து வருகின்றன” என்றார்.

5 ஆண்டுக்குப் பிறகு: கடந்த 2019-ம் ஆண்டு ரஷ்யாவின் விளாடிவாஸ்டோக் நகரில் பொருளாதார மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன் பிறகு 5 ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

மேலும், கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. அதன் பிறகு பிரதமர் மோடி ரஷ்யா சென்றிருப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *