டைட்டன் நீர்மூழ்கி பாகங்களுடன் மனித உடல் உறுப்புகளும் மீட்பு – ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்படுகிறது | Titan submarine parts along with human body parts are taken for recovery study
வாஷிங்டன்: அட்லாண்டிக் கடலில் அழுத்தம் காரமாக உடைந்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கி பாகங்களுடன், மனித உடல் உறுப்புகளும் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
கனடா அருகே வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்வையிட, டைட்டன் என்ற நீர்மூழ்கியில் 5 பேர் கடந்த 18-ம் தேதி சென்றனர். அவர்கள் சென்ற சில மணிநேரத்தில் நீர்மூழ்கியின் தகவல் தொடர்பு துண்டானது. இதை தேடும்பணி 5 நாட்களாக நடந்தது. இந்நிலையில், டைட்டன் நீர்மூழ்கியின் உடைந்த பாகத்தை, தேடுதல் பணிக்காக அனுப்பப்பட்ட நீர்மூழ்கி ரோபோ கண்டுபிடித்தது. இதையடுத்து, டைட்டன் நீர்மூழ்கி, அழுத்தத்தால் உடைந்து சிதறியதாகவும், அதில் பயணம் செய்த இங்கிலாந்து தொழில் அதிபர் ஹமிஸ் ஹார்டிங், டைட்டன் நீர்மூழ்கியின் பைலட் ஸ்டாக்டன் ரஷ், பிரான்ஸ் நாட்டு டைவர் பால் ஹென்றி, பாகிஸ்தான் வம்சாவளி தொழில் அதிபர் ஷாஜதா தாவூத்,அவரது மகன் சுலைமான் ஆகியோர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் டைட்டன் நீர்மூழ்கியின் வால் பகுதி பாகத்தை அமெரிக்க கடலோர காவல் படை மீட்டுள்ளது. அதில் சிக்கியிருந்த மனித உடல் உறுப்பு பாகங்களும் கவனமாக மீட்கப்பட்டுள்ளன. அது ஆய்வுக்காக அனுப்பப்படும் என அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. டைட்டன் நீர்மூழ்கியின் பாகங்கள் அமெரிக்க துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன.