Tuesday, October 8, 2024
World

லெபனானில் தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்: முழு வீச்சு போர் குறித்து பைடன் எச்சரிக்கை | Israel prepares for Lebanon ground offensive as Biden warns of all-out war


லெபனான் மீது தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் பைடன், ஒரு முழு வீச்சுப் போருக்கான சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இதனால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் கடந்த திங்கள்கிழமை லெபனானின் தெற்கு பகுதி நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்தது. குறிப்பாக, லெபனானின் ஹெர்மல், பிப்லோஸ், பால்பெக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதை இஸ்ரேல் உளவுத் துறை கண்டறிந்ததையடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

3-வது நாளாக நேற்று (புதன்கிழமை) இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 72 பேர் கொல்லப்பட்டனர். 233 பேர் காயமடைந்தனர். இதனால் லெபனானில் மொத்த உயிரிழப்பு 620 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 5 லட்சம் பேர் வரை தெற்கு லெபனானில் இருந்து மற்ற பகுதிகளுக்குப் பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் ராணுவத் தலைவர் லெஃப்டினன்ட் ஜெனரல் ஹெர்ஸி ஹலேவி வீரர்கள் மத்தியில் ஆற்றிய உரையில், “உங்கள் தலைகளுக்கு மேல் ஜெட் விமானங்கள் பறப்பதை உணர்ந்திருப்பீர்கள். நாம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறோம். இனி தரைவழித் தாக்குதலுக்கும் நாம் ஆயத்தமாக வேண்டும். ஹிஸ்புல்லாக்களை தொடர்ந்து பலவீனப்படுத்துவோம்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், “லெபனானில் போர் நடக்கக் கூடாது. இதற்காகத் தான் இஸ்ரேல் மேலும் முன்னேற வேண்டாம் நான் வலியுறுத்தினேன். ஹிஸ்புல்லாக்களும் இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலை நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். ஐ.நா. பொதுச் சபை உரைக்கு முன்னதாக மேக்ரான் அமெரிக்க அதிபர் பைடனுடன் இஸ்ரேல் – லெபனான் மோதல் பற்றி ஆலோசித்தார். அப்போது 21 நாட்கள் தற்காலிகமாக மோதலை நிறுத்தி அதிகரிக்கும் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்ற யோசனையை பைடனிடம் அவர் முன்வைத்தார்.

பைடனின் எச்சரிக்கை: ஆனால் ஏபிசி செய்தி நேர்காணலில் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், “ஒரு முழு வீச்சுப் போருக்கு வாய்ப்புள்ளது. அதேவேளையில் இந்த மோதலைத் தடுக்க ஏதுவான சூழலும் இல்லாமல் இல்லை. ஒருவேளை அது நடந்தால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அடிப்படையிலேயே மாற்றங்கள் ஏற்படும். ஒரு தீர்வுக்கான வாய்ப்பு இன்னமும் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

‘லெபனான் தாக்குதல் அபாயகரமானது’ – லெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் அபாயகரமானது என்று பத்திரிகையாளரும், போர் ஆய்வாளருமான ராமி கோரி தெரிவித்துள்ளார். இவர் லெபனானின் பெய்ரூட் நகரில் உள்ள ஓர் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் முக்கியப் பொறுப்பிலும் இருக்கிறார்.

தற்போதைய இஸ்ரேல் – லெபனான் மோதல் குறித்து அவர், “இப்போது ஏற்பட்டுள்ள மோதல் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் அபாயகரமானது. இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சினையின் வேர் இதுவரை எப்போதுமே தீர்க்கப்பட்டதில்லை. கடந்த 30, 40, 50 ஆண்டுகளாகவே இந்த மோதல் நடக்கிறது.

ஆனால் இப்போதைய சூழலில் இந்த மோதல் பெரிய சக்திகளையும் போருக்குள் இழுப்பதாக அமையும். ஏற்கெனவே இஸ்ரேலுக்கு அமெரிக்கா ராணுவ உதவி செய்கிறது. ஐ.நா. போன்ற சர்வதேச அரங்குகளில் இஸ்ரேலுக்கு முட்டுக் கொடுக்கிறது. இப்போது அமெரிக்கா இஸ்ரேலுக்கு மிகப் பெரிய அளவில் ராணுவ உதவிகளை அனுப்பியுள்ளது. இதனால் மொத்த மத்திய கிழக்குப் பிராந்தியமும் போர் மேகத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

அதனால் இஸ்ரேல் – லெபனான் இடையேயான இப்போதைய மோதல் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மிகப்பெரிய அச்சுறுத்தல். மிகப் பெரிய போர் ஏற்படலாம். அது பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றின் அடிப்படை ஒருமைப்பாட்டையே அந்தப் போர் அசைத்துப் பார்க்கக் கூடும்” என எச்சரித்துள்ளார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *