சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை மீட்கும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது | SpaceX Capsule set to rescue Sunita Williams and Barry Wilmore reaches ISS
வாஷிங்டன்: சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை மீட்கும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் ஞாயிற்றுக்கிழமை மாலை சர்வேதேச விண்வெளி மையத்தை அடைந்தது.
கடந்த ஜூன் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இருவரும் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்துக்குப் புறப்பட்டனர். அவர்கள் அடுத்த நாளான ஜூன் 6-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். அப்போது முதல் அவர்கள் இருவரும் அங்கேயே உள்ளனர். அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு இதற்கு காரணமாக அமைந்தது.
விண்வெளி மையத்தில் சுமார் 100 நாட்களுக்கும் மேலாக உள்ள அவர்களை பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், அவர்களை பூமிக்கு அழைத்து வரும் பொறுப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வசம் நாசா ஒப்படைத்தது.
இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை மீட்கும் முனைப்பில் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் சர்வேதேச விண்வெளி மையத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை அடைந்தது.
நாசா விண்வெளி வீரர்கள் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலக்ஸாண்டர் கோர்புனோவ் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் ஃப்ளோரிடாவின் கேப் கானவெரலில் இருந்து சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்குப் புறப்பட்டனர். க்ரூ-9 விண்கலம் ஞாயிறு மாலை 5.30 மணியளவில் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது. அந்த விண்கலனில் மேலும் 2 வீரர்கள் அமர இடம் இருக்கிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.