லெபனானில் இதுவரை 1,000+ பலி: இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலை எதிர்கொள்ள தயார் என ஹிஸ்புல்லா உறுதி
பெய்ரூட்: லெபனான் மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தினால், அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். 2006-இல் இஸ்ரேலுடனான மோதலில் நாங்கள் வென்றது போல், இம்முறையும் வெற்றி பெறுவோம் என்று ஹிஸ்புல்லா இயக்கம் உறுதிபடத் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஒரு வார காலத்துக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை லெபனானில் 87 குழந்தைகள், 156 பெண்கள் உள்பட 1030 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனான் நாடு முழுவதும் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டின் நிலைமை குறித்து விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் அவசர பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். லெபனான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், தரைவழியாகவும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. லெபனானின் சுகாதார அமைச்சகம், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 105 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும், பலர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.