லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: ஹமாஸ் தலைவர், 3 பாலஸ்தீன தீவிரவாதிகள் உயிரிழப்பு | Israel attacks Lebanon again
பெய்ரூட்: லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் மூத்த தலைவர் மற்றும் 3 பாலஸ்தீன தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
தெற்கு லெபனானின் டயர் நகரில்உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் மீது இஸ்ரேல் விமானப்படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஹமாஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான படே ஷெரிப் அபு எல்-அமின், அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் உயிரிழந்ததாக அந்த அமைப்பு நேற்று தெரிவித்தது.
மேலும் தலைநகர் பெய்ரூட்டின் கோலா மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மீதும் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில், தங்கள் அமைப்பைச் சேர்ந்த 3 பேர்உயிரிழந்ததாக ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு எதிராக போரிட்டு வரும் தி பாப்புலர்பிரன்ட் பார் தி லிபரேஷன் ஆப்பாலஸ்தீனம் (பிஎப்எல்பி) தெரிவித்துள்ளது. பெய்ரூட் நகர எல்லைக்கு உள் பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருப்பது இதுதான் முதல் முறை ஆகும். இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் தாக்குதல் நடவடிக்கை தொடரும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை குறிவைத்து, இஸ்ரேல் ராணுவம் கடந்தசில தினங்களாக வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். ஈரான் ஆதரவு பெற்ற தீவிரவாத குழுக்களை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், லட்சக் கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளியில் தங்கிஉள்ளனர். 2.5 லட்சம் பேர் தங்குவதற்கான ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளதாக லெபனான் அமைச்சர் நாசர் யாசின் தெரிவித்துள்ளார்.
லெபனான் வரலாற்றில் மிகப்பெரிய பேரிடர் இது என அந்நாட்டுபிரதமர் நஜிப் மிதாகி தெரிவித்துள்ளார். “வீடுகளை விட்டு வெளியேறியவர்களை தங்கவைப்பதற்கான வசதியை செய்து கொடுக்க அரசுக்கு வசதி இல்லை என்பது மிகப்பெரிய சவால்” என மெர்சி கார்ப்ஸ் என்ற மனித உரிமை அமைப்பின் இயக்குநர் லைலா அல் அமின் தெரிவித்துள்ளார்.
ஹவுதி மீது தாக்குதல்: யேமன் நாட்டில் ஹவுதி தீவிரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக, துறைமுக நகரான ஹோடீடாவில் உள்ள ஹவுதி தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.