”நான் வாக்னர் குழு தலைவராக இருந்திருந்தால்…” – அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பகடி | Russia’s Putin snubs Prigozhin, Biden jokes about poison
வாஷிங்டன்: ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக வாக்னர் ஆயுதக் குழு கிளர்ச்சியில் ஈடுபட்ட பிர்கோஸின் எங்கு இருக்கிறார் என்பது இன்னும் மர்மமாக இருக்கும் சூழலில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இதுகுறித்து பைடன் கிண்டலாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் பைடன், நான் மட்டும் பிர்கோஸினாக இருந்திருந்தால். எனக்கு அளிக்கப்படும் உணவைக் கூட கவனமாகவே உட்கொள்வேன் என்று கூறியுள்ளார்.
ரகசிய சந்திப்பு: ரஷ்ய ஆதரவு கூலிப்படையாக இருந்த வாக்னர் குழு ரஷ்யாவுக்கு எதிராக திரும்பி மாஸ்கோவை நோக்கி அணிவகுத்துச் சென்றது. எனினும் ஒரே நாளில் இந்த கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. கிளர்ச்சி முடிவுக்கு வந்த சில நாட்களிலேயே வாக்னர் குழுவின் தலைவர் பிர்கோஸினை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சந்தித்து பேசியது தற்போது தெரியவந்துள்ளது. ரஷ்ய அரசும் இந்த சந்திப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனால், அதன் பின்னர் பிர்கோஸின் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. பிர்கோஸின் பெலாரஸ் நாட்டில் இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அவர் அங்கில்லை என்று அந்நாட்டு அதிபரே அறிவித்துவிட்டார். இந்நிலையில் அந்த சந்திப்பின்போதே பிர்கோஸின் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் உலா வரும் சூழலிலேயே அமெரிக்க அதிபர் பைடன் இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
வாக்னர் ஆயுதக் குழுவின் பின்புலம் என்ன? – ரஷ்ய அதிபர் புதினுக்கு புதிய நெருக்கடி தரும் வாக்னர் ஆயுதக் குழுவின் பின்புலம் ஒரு தசமத்துக்கும் குறைவானதாகத்தான் இருக்கிறது. வாக்னர் ஆயுதக் குழு என்பது ரஷ்யாவில் இயங்கிவரும் தனியார் ராணுவ ஒப்பந்த அமைப்பாகும். இது ஒருவித கூலிப்படை என்றும் கூறலாம். ஏனெனில், ரஷ்யா மட்டுமல்லாது லிபியா, மாலி, சிரியா எனப் பல பகுதிகளிலும் உள்நாட்டுப் போரில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசாங்கத்துக்கு ஆதரவாக இந்தக் குழுவினர் இயங்குகின்றனர். ஆனால், உலகம் முழுவதும் இந்தக் குழு சட்டத்துக்கு அப்பாற்பட்டே செயல்படுகிறது. ரஷ்யாவிலும் தனியார் ராணுவ ஒப்பந்தக்காரர்கள் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மறைமுகமாக அதிபர் புதினின் ஆதரவோடு, ராணுவத்தின் சம்மதத்தோடு தேவைப்படும்போது இந்தக் குழு இயக்கிக் கொள்ளப்படுகிறது.
வாக்னர் ஆயுதக் குழு உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ராணுவத் தாக்குதலின்போது பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. குறிப்பாக, கிழக்கு உக்ரைனின் பக்முத் பகுதி கைப்பற்றப்பட்டதில் வாக்னர் ஆயுதக் குழுவின் செயல்பாடுகளுக்கு அதிபர் புதினே பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிமிட்ரி உக்டின் என்ற முன்னாள் ரஷ்ய அதிகாரி மற்றும் யெவ்ஜின் பிர்கோஸின் என்ற புதினின் முன்னாள் தலைமை சமையல் நிபுணர் ஆகிய இருவரும் இணைந்து 2014-ல் இந்தப் படையை உருவாக்கினர். இதில் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள், சிறை சென்று திரும்பியவர்கள் உண்டு. ஏன் தண்டனையிலிருந்து தப்பிக்க நினைப்பவர்கள் கூட ‘தி வாக்னர்’ குழுவில் இணைந்து தப்பித்துக் கொள்வதுண்டு. இது ஒரு மூர்க்கத்தனமான ஆயுதக் குழு. பக்முத்தில் வாக்னர் குழுவை இறக்கி தங்கள் படைகளுக்கு பெரும் சேதத்தை ரஷ்யா ஏற்படுத்தியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டி இருந்தது.
இவ்வாறாக இவர்களின் படைகள் உக்ரைன் மீதான தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இப்போது நடக்கும் போர் தொடங்குவதற்கு முன்னரே 2014 தொட்டு உக்ரைனில் அவ்வப்போது சிறு தாக்குதல்களை இவர்கள் நடத்தினர். குறிப்பாக, கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் போரில் ‘தி வாக்னர்’ ஆயுதக் குழு பெரும் பங்காற்றியது. 2015-ல் தொடங்கி இந்த ஆயுதக் குழு சிரியா, லிபியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் உள்நாட்டுக் கிளர்ச்சிகளில் அரசுக்கு ஆதரவாகப் பணியாற்றியுள்ளது. அதேபோல் சிரியாவின் தங்கச் சுரங்கங்களைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.