ஏஐ தொழில்நுட்பத்தால் மனித சமூகத்துக்கு ஆழமான உளவியல் பாதிப்பு: ஐ.நா. எச்சரிக்கை | Malicious use of AI could cause unimaginable damage
நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தும்போது நம்மால் கற்பனை செய்ய முடியாத ஆழமான உளவியல் பாதிப்புகள் ஏற்படும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தரேஸ் எச்சரித்துள்ளார்.
உலக நாடுகளில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நன்மை, தீமைகள் பற்றிய விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கவனத்தில் கொண்டு இது தொடர்பான விவாதக் கூட்டங்களை ஐக்கிய நாடுகள் சபை கடந்த சில மாதங்களாகவே நடத்தி வருகிறது.
அந்த வகையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் நேற்று மாலை நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தை பிரிட்டன் தலைமையேற்று நடத்தியது. கூட்டத்தின் தலைவராக பிரிட்டனின் வெளியுறவுத் துறை செயலாளர் ஜேம்ஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு நாடுகள் செயற்கை நுண்ணனறிவுத் தொழில்நுட்பத்தின் சாதக, பாதங்கள் குறித்து கருத்து தெரிவித்தனர்.
ஆலோசனை கூட்டத்தின் முடிவில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தரேஸ் பேசும்போது, “செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்படும் சைபர் தாக்குதல்கள் ஏற்கெனவே ஐ.நா.வின் அமைதி மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை இலக்காகக் கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தும்போது, நம்மால் கற்பனை செய்ய முடியாத ஆழமான உளவியல் பாதிப்புகள் ஏற்படும். இதில், உயிர் சேதங்களும் ஏற்படும். செயற்கை நுண்ணறிவு – சாட் ஜிடிபி போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கப்படும் செய்திகள், உருவங்கள், படங்கள் தவறான தகவல் மற்றும் வெறுப்பை பரப்பி மனித செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகளை நன்மைக்காக மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும் என்பதே இந்தக் கூட்டத்தின் முக்கியக் குறிக்கோளாக உள்ளது. எனினும், இம்மாதிரியான தொழில்நுட்பங்கள் அரசாங்கங்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.