Friday, December 8, 2023
World

அதிக எடை, மோசமான வானிலையால் 19 பயணிகளை இறக்கிவிட்ட இங்கிலாந்து விமானம் | UK flight disembarks 19 passengers due to overweight bad weather


லண்டன்: இங்கிலாந்து நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று அதிக எடை மற்றும் மோசமான வானிலை காரணமாக பறக்க முடியாததால் 19 பயணிகளை இறக்கிவிட்டு புறப்பட்டுச் சென்றுள்ளது.

இங்கிலாந்தின் ஈஸிஜெட் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று, கடந்த 5-ம் தேதி இரவு 9.45 மணிக்கு ஸ்பெயினின் லான்ஸரோட்டி நகரில் இருந்து இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு புறப்படத் தயாராக இருந்தது. ஆனால் அதிக எடை மற்றும் மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஊக்கத் தொகையாக.. இதையடுத்து, அந்த விமானத்தின் பைலட் பயணிகளிடம் கூறும்போது, “இங்கு அமர்ந்துள்ள அனைவருக்கும் நன்றி. அதிக எடை காரணமாக விமானம் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை, சாதகமற்ற காற்று உள்ளிட்ட பல காரணங்களால் விமானத்தை இயக்க முடியவில்லை. இதுகுறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் பேசினேன். விமானத்தின் எடையைக் குறைப்பதுதான் ஒரே வழி என அவர்கள் தெரிவித்தனர். எனவே லிவர்பூல் செல்லும் பயணத்தை ரத்து செய்ய 20 பேர் தாங்களாக முன்வர வேண்டும். அவ்வாறு பயணத்தை ரத்து செய்வோருக்கு தலா 500 யூரோ (ரூ.45 ஆயிரம்) ஊக்கத் தொகையாக வழங்கப்படும்” என்றார்.

பைலட் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பைலட்டின் கோரிக்கையை ஏற்று 19 பேர் தாமாக முன்வந்து விமானத்திலிருந்து கீழே இறங்கியதாக ஈஸிஜெட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் அடுத்த விமானத்தில் லிவர்பூல் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இது வழக்கமான நடைமுறைதான் என்றும், பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ஈஸிஜெட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *