பிரான்ஸில் பள்ளிகளில் முஸ்லிம் குழந்தைகள் ‘அபயா’ அணிந்து வர தடை – விரைவில் அமல் | France to ban wearing abaya dress in schools: Minister
பாரிஸ்: “பள்ளிகளில் முஸ்லிம் சிறுமிகள் ‘அபயா’ எனப்படும் முழு அங்கி ஆடையை அணியத் தடை விதிக்கப்படும். அரசுப் பள்ளிக்கூடங்களில் இந்தக் கட்டுப்பாடு அமலுக்குக் கொண்டுவரப்படும்” என்று பிரான்ஸ் நாட்டின் கல்வி அமைச்சர் தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்துள்ளார். இது அந்நாட்டில் விவாதப் பொருளாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் அரசுப் பள்ளிகளில் எந்தவித மத அடையாளங்களுடன் மாணவர்கள் வரக் கூடாது என்பது சட்டமாக உள்ளது. அதன்படி பெரிய அளவிலான சிலுவைகள், யூதர்களின் கிப்பாஸ், முஸ்லிம்கள் பயன்படுத்தும் தலையை மறைக்கும் முக்காடு என எதுவும் அனுமதிக்கப்படுவதுல்லை. இந்நிலையில், இஸ்லாமிய சிறுபான்மையினச் சிறுமியர் அணியும் அபயா எனப்படும் முழு அங்கியை அச்சமூக சிறுமிகள் அரசுப் பள்ளிக்கு அணிந்துவர தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு கல்வி அமைச்சர் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
முன்னதாக, கடந்த 2004-ல் பள்ளிகளில் தலைக்கு மட்டும் அணியப்படும் முக்காடுகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. 2010-ல் முகத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பிரான்ஸின் 50 லட்சம் முஸ்லிம்கள் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தச் சூழலில் அபயாவுக்கு தடை விதிப்பது தொடர்பாக அந்நாட்டு கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டால் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “அபயா எனப்படும் முழு அங்கியை இனிமேல் பள்ளிச் சிறுமிகள் அணிந்துவர அனுமதிக்கப் போவதில்லை. ஒரு குழந்தை பள்ளி வகுப்பறைக்குள் நுழையும்போது அதன் புறத்தோற்றத்தைக் கொண்டு குழந்தையின் மதத்தை கண்டுபிடிக்கும்படி அவர்கள் ஆடை, அணிகலன்கள் இருக்கக் கூடாது” என்றார். ஏற்கெனவே பிரான்ஸில் பெண்கள் ஹிஜாப் அணியத் தடையிருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ள பிரான்ஸ் நாட்டின் முஸ்லிம் சிறுபான்மையின அமைப்புகளின் கூட்டமைப்பான தி பிரென்ச் கவுன்சில் ஆஃப் முஸ்லிம் ஃபெயித், ஆடை மட்டுமே மத அடையாளம் ஆகிவிடாது. ஆகையால் அபயா தடை ஏற்புடையது அல்ல என்று தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள சூழலில் அந்நாட்டு கல்வி அமைச்சரின் இந்த புதிய கெடுபிடி பலதரப்பு மக்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் அதிருப்தியில் உள்ளனர்.