Saturday, September 23, 2023
World

‘அது ஒரு மினி சுனாமி’ – லிபியாவில் புயல், மழை பலி 6000+ ஆக அதிகரிப்பு | Libya floods live news: 6,000 dead, thousands missing in stricken Derna


திரிபோலி: லிபியாவில் புயல், மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6000-ஐ கடந்தது. பல ஆயிரம் பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மத்திய தரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியன் கடல் பகுதியில் அண்மையில் புயல் உருவானது. டேனியல் என்று பெயரிடப்பட்ட இந்தப் புயல் கடந்த 10-ம் தேதி லிபியாவின் பங்காசி பகுதியில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. டேனியல் புயலால் கடந்த சில நாட்களாக லிபியாவில் வரலாறு காணாத பலத்த மழை பெய்தது. கனமழையால் கிழக்கு லிபியா பகுதியில் டெர்னா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்தநதியில் கட்டப்பட்டுள்ள 2 அணைகள் உடைந்தன. இதன் காரணமாக டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

அது ஒரு மினி சுனாமி: இஸ்லாமிக் ரிலீஃப் சலா அமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவர் கூறுகையில், “டெர்னாவின் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இது கிட்டத்தட்ட இருமடங்காகக் கூட அதிகரிக்கலாம். நகரத்தின் 30 சதவீதம் முழுவதுமாக மூழ்கிவிட்டது. டெர்னாவில் ஏற்பட்டுள்ளது ஒரு மினி சுனாமி எனக் கூறலாம். அந்த அளவுக்கு அத்தனையையும் வாரி சுருட்டிக் கொண்டது. வீடுகளையே தரைமட்டமாக தண்ணீர் இரையாக்கிக் கொண்டுள்ளது. இதில் குடும்பங்கள் பிழைப்பது எங்கே. டெர்னா ஒரு பழமையான நகரம். அங்கு பல குடும்பங்கள் ஆண்டாண்டு காலமாக வசித்துவந்தன. டெர்னாவின் பலி எண்ணிக்கை இரு மடங்கு அல்ல நான்கு மடங்கு அதிகரித்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்றார்.

78 எகிப்தியர்கள் பலி: எகிப்தில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக அண்டை நாடான லிபியாவுக்குப் புலம் பெயர்வோர் தேர்வு செய்வது கிழக்குப் பகுதிதான். புயல் மற்றும் அணை உடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு லிபியாவில் 78 எகிப்தியர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு எகிப்துக்கே அனுப்பப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

அணை உடைந்தது எப்படி? – டேனியல் புயல் மேற்கு லிபியாவில் தாக்கியபோது கிழக்கு லிபியாவின் டெர்னா அணை எப்படி உடைந்தது என்ற சந்தேகம் ஏற்படலாம். டேனியல் புயல் வீசியபோது மழை வெள்ளமானது அணைக்குப் பின்புறத்தில் மிக அதிகமாகத் தேங்கியது. இது அணை உள்வாங்கிக் கொள்ள வழிவகுத்தது. அழுத்தத்தால் அணை உள்வாங்கி உடைய டெர்னா பேரழிவை சந்தித்துள்ளது என்று வல்லுநர்கள் விளக்குகின்றனர்.

நீளும் உதவிக்கரங்கள்: லிபியாவுக்கு துருக்கி, எகிப்து, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் 150 டன் உணவு, நிவாரணப் பொருட்கள், மருந்துகள் கொண்ட இரண்டு விமானங்களை அனுப்பியுள்ளது. குவைத்தில் இருந்து 40 டன் நிவாரணப் பொருட்களுடன் விமானம் கிளம்பியுள்ளது. ஜோர்டான் ராணுவ விமானத்தில் உணவுப் பொட்டலங்கள், கூடாரங்கள், போர்வைகள், விரிப்புகளை அனுப்பியுள்ளது.

ஜெர்மனி, ரொமேனியா, ஃபின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளன. ஐ.நா.வும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகிறது. உள்நாட்டுக் கலவரத்தால் ஆண்டாண்டு காலமாக பாதிக்கப்பட்ட டெர்னா தற்போதுதான் மீண்டுவரத் தொடங்கியது அதற்குள் இந்தப் பேரிடர் நிகழ்ந்துவிட்டது என லிபியாவுக்கான யுனிசெப் அமைப்பின் தலைவர் மிச்செல் செர்வதெய் வருத்தம் தெரிவித்தார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *