தாக்குதலைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல்: நவீன ஏவுகணை தடுப்பு அமைப்புகளை அனுப்பிவைக்கும் அமெரிக்கா | US rushes more air defence systems to Mideast amid escalation by Iran, proxies
டெல் அவிவ்: இஸ்ரேல் – ஹமாஸ் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்துவரும் நிலையில் அமெரிக்கா தனது மிகவும் சக்திவாய்ந்த ‘தாட்’ Terminal High Altitude Area Defense (THAAD) எனப்படும் ஏவுகணை உள்ளிட்ட வான்வழித் தாக்குதல் தடுப்பு அமைப்பை அனுப்பிவைக்கிறது.
ஏற்கெனவே இஸ்ரேல் ராணுவ வீரர்களுடன் அமெரிக்க ராணுவத்தின் டெல்டா படையும் காசாவுக்குள் நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில் தாட், பேட்ரியாட் போன்ற ஏவுகணைத் தடுப்பு அமைப்புக்ளை அமெரிக்கா அனுப்புகிறது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஈரான், குவைத், லெபனான், சிரியா எனப் பல நாடுகள் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்க உதவிகள் இஸ்ரேலுக்கு நீண்டு கொண்டே இருக்கிறது.
13000 ஆயிரம் வீரர்கள்: அமெரிக்க அதிபர் பைடன் இஸ்ரேல் சென்றபோது டெல்டா படை வீரர்களை சந்தித்துப் பேசினார். அமெரிக்க ராணுவத்தின் டெல்டா வீரர்கள் ஆப்கானிஸ்தான், இராக், குவைத், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ரகசிய ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். இதேபோல பாலஸ்தீனத்தின் காசா பகுதியிலும் ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்கும் ரகசிய நடவடிக்கையில் டெல்டா படை வீரர்கள் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 13,000 அமெரிக்க வீரர்கள் இஸ்ரேலில் முகாமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
16வது நாள்; பறிபோன 4300 உயிர்கள்: கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர். 2 மணி நேரத்தில் இஸ்ரேலை நோக்கிப் பாய்ந்த ஏவுகணைகளில் பலர் உயிரிழந்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத இஸ்ரேல் சில மணி நேரங்களில் பதில் தாக்குதலைத் தொடங்கியது. தாக்குதல் தொடங்கியவுடனேயே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் தென்யாகு கூறியது, “ஹமாஸ் முற்றிலும் அழிக்கப்படும்” என்பதுதான். அந்த நாள் முதல் இன்று 16வது நாளாக இஸ்ரேல் தீவிரத் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் உயிரிப்பலி 4300ஐ கடந்துள்ளது. நேற்றிரவு (அக்.21) இரவு இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் 55 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
சிரிய விமானநிலையங்களில் தாக்குதல்: இந்நிலையில் அண்டை நாடான சிரியாவின் டமஸ்கஸ் மற்றும் அலெப்போ நகர விமான நிலையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சிரிய விமான நிலைய ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலால் அங்கு விமான சேவை தடைபட்டுள்ளது.
வடக்கு காசாவில் நேற்றிரவு இஸ்ரேலியப் படைகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தின. இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மைரல் டேனியல் ஹகாரி, காசாவாசிகள் விரவில் வடக்கை காலி செய்து தெற்கை நோக்கிச் செல்ல வேண்டும் என்று எச்சரித்த நிலையில் அங்கு தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் உள்ள 40 சதவீத கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இவற்றில் பல முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளன.
ஒருபுறம் உதவி மறுபுறம் தாக்குதல்: சவுதி, கத்தார், சீனா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறுநாடுகள் மற்றும் தொண்டு அமைப்புகள் சார்பில் சரக்கு விமானங்கள் மூலம் எகிப்தின் அல் ஆரிஷ் விமான நிலையத்துக்கு சுமார் 3,000 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவை சுமார் 200-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றப்பட்டு எகிப்து- காசாவின் ரஃபா எல்லை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.
ஆனால்இஸ்ரேல் போர் விமானங்கள் ரஃபாஎல்லைப் பகுதியில் தொடர் தாக்குதல்களை நடத்தியதால் ரஃபா எல்லையை திறந்து நிவாரணப் பொருட்களை காசாவுக்குள் கொண்டு செல்ல முடியவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முயற்சியால் நிவாரணப் பொருட்களை காசாவுக்குள் கொண்டு செல்ல இஸ்ரேல் அரசு அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று (அக்.21) 20 வாகனங்கள் காசாவுக்குள் சென்றன. உதவிகள் ஒருபுறம் சென்றாலும்கூட இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரவப்படுத்தி வருகிறது.