Friday, December 8, 2023
World

அக்.7-ல் நிகழ்ந்தது என்ன?- ஹமாஸ் போர் அட்டூழியங்கள் வெளியிடப்படும்: இஸ்ரேல் | Israel announces will release Hamas war atrocities such as the Holocaust denial


டெல் அவிவ்: கடந்த அக்.7-ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்ட நிலையில் அன்றைய தாக்குதல் தொடர்பாக இதுவரை வெளிவராத காட்சிகளை இன்று (திங்கள்கிழமை) வெளியிடப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஹமாஸ் தாக்குதலை யூத இன அழிப்பு முயற்சி எனக் குறிப்பிடும் இஸ்ரேல் அரசு ஹமாஸ்கள் செய்த அட்டூழியங்கள் குறித்து தனிநபர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் அரசின் செய்தி தொடர்பாளர் எலான் லேவி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தி ஒன்றில், சமகாலத்தின் ஹோலோகாஸ்ட் மறுப்பு நிகழ்வுக்கு நாங்கள் சாட்சிகளாகியிருக்கிறோம்.

அக்.7-ம் தேதி ஹமாஸ்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது அவர்களின் தற்கொலைப்படை வீரர்களின் உடலில் இருந்த காமிரக்களில் பதிவான மாற்றம் செய்யப்படாத, ஹமாஸ் படைகளின் அட்டூழியங்களை வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்களின் பார்வைக்கு இஸ்ரேல் வெளியிடும் என்று பதிவிட்டு, வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார். வீடியோவில், “துரதிர்ஷ்டவசமாக நான் இதைச் சொல்வேன் என்றும், ஒரு நாடாக நாம் இதனைச் செய்வோம் என்பதனை என்னால் நம்ப முடியவில்லை. அரசு பத்திரிக்கையாளர் அலுவலகத்தில் திங்கள்கிழமை வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்காக, அக்.7ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் எங்கள் மக்களுக்கு எதிராக நடத்திய காட்டுமிராண்டித் தாக்குதல் காட்சிகள் காண்பிக்கப்படும்” என்று பேசியுள்ளார்.

இதுவரை பொதுமக்களின் பார்வைக்கு வெளிவராத அந்த வீடியோவில் இஸ்ரேலியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்படுவதும், நூற்றுக்கணக்கானவர்கள் பிணைக்கைதிகளாக பிடிக்கப்படுவதும் பதிவாகியுள்ளது. இதனிடையே உயிர் பிழைத்துள்ளவர்கள் பலரின் சாட்சியங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும், அடையாளம் காணும் பணிகள் நடந்து வரும் நிலையில், அக்.7ம் தேதி ஹமாஸ் தாக்குதலை இஸ்ரேல் மிகைப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

திங்கள்கிழமை நிலவரப்படி இஸ்ரேல் ஹமாஸ்களுக்கிடையேயான மேதலில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 220 இஸ்ரேலியர்கள் சிறைபிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் காசாபகுதியில் இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 14,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் சூழலுக்கு மத்தியில் அதனை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச அளவில் ராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இஸ்ரேல் அரசு இந்த வீடியோக்களை வெளியிடும் விவகாரத்தை அறிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *