Friday, December 8, 2023
World

இஸ்ரேல் – ஹமாஸ் போர் | அப்பாவி மக்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்: ஐநா வலியுறுத்தல் | Civilian safety must be paramount in Israel-Hamas war: Antonio Guterres


நியூயார்க்: மத்திய கிழக்கில் நிலைமை நேரத்துக்கு நேரம் மோசமாகி வருவதாக கூறிய ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், போரில் பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் மோதல், அதனால் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடி ஆகியவைகள் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் நியூயார்க்கில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமைக்கிழமை கூடியது. அதில் பேசிய ஐ.நா., பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கூறியதாவது: மத்திய கிழக்கில் நிலைமை ஒவ்வொரு மணிநேரத்துக்கும் மோசமடைந்து வருகிறது. பிரிவுகள் சமூகங்களைப் பிளவுபடுத்தி பதற்றத்தை தொடந்து கொதிப்படையச் செய்கின்றன. இதனால் போரின் போது பொதுமக்களின் பாதுகாப்புத் தொடங்கி கொள்கைகளில் உறுதியாக இருப்பது இன்றியமையாதது. இந்த மனிதத் தன்மையற்ற துன்பத்தை குறைப்பதற்கு, மனிதாபிமான உதவிகள் கெண்டு செல்வதை எளிதாக்க வேண்டும். பிணையக் கைதிகள் விடுதலை செய்யும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஐ.நா. தீர்மானங்கள், சர்வதேச சட்டங்கள், முந்தைய ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இஸ்ரேலியர்களின் பாதுகாப்புக்கான நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். பாலஸ்தீனத்தின் சுதந்திரமான அரசுக்கான தேவை உணரப்பட வேண்டும். மேலும், குடிமக்களைக் கொலை செய்தல் மற்றும் கடத்துதல், குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்பட்ட ஹமாஸ்களின் ராக்கெட் குண்டு தாக்குதலை நியாயப்படுத்த முடியாது. அதேபோல் ஹமாஸ்களின் தாக்குதல் வெற்றிடத்தில் நடத்தப்பட வில்லை என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும்.

பாலஸ்தீனியர்கள் கடந்த 56 வருடங்களாக ஆக்கிரமிப்புகளின் அழுத்தத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். ஆனால் பாலஸ்தீனர்களின் இந்த மனக்குமுறல் ஹமாஸ்களின் தாக்குதலை நியாயப்படுத்த முடியாது. அதேபோல், இந்தத் தாக்குதல் காரணங்களுக்காக பாலஸ்தீன மக்கள் தண்டிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது” என்று தெரிவித்தார்.

இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை, காசா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உணவு, குடிநீர், மின்சாரமின்றி காசா மக்கள் தவித்து வருகின்றனர். காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-அஹ்லி மருத்துவமனை மீது 4 நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட தாக்குதல் உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது.

திங்கள்கிழமை காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 140-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருப்பதாகவும் ஹமாஸ் தெரிவித்திருக்கிறது. அதே வேளையில், ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *