காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழப்பு | Palestinian Doctor Says 27 Killed In Israeli Strike On UN School In Gaza
ஜெருசலேம்: காசா பகுதியில் உள்ள ஐ.நா.வால் நடத்தப்படும் பள்ளிமீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 90-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ம் தேதி ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதோடு, தரைவழியாகவும், வான் வழியாகவும், இஸ்ரேல் பகுதிக்குள் ஊடுருவி இஸ்ரேலியர்களை தாக்கினர். இந்தத் தாக்குதலில் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகமாக இறந்திருப்பதாக தகவல் வெளியாகி, உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஹமாஸின் முக்கிய தலைவர்களை குறிவைத்து கொன்று வருகிறது.
அந்த வகையில், கான் யூனிஸ் என்ற நகரின் ஹமாஸ் கடற்படைத் தளபதி அமர் அபு ஜலாலா கான் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. கான் யூனிஸ் என்பது காசாவின் தெற்கில் உள்ள ஒரு நகரமாகும், அங்கு நூற்றுக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் இஸ்ரேலின் அறிவுறுத்தலின் பேரில் வடக்கிலிருந்து வெளியேறினர். மேலும் காசா பகுதியில் உள்ள ஐ.நா.வால் நடத்தப்படும் பள்ளிமீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். 90-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.