‘இந்தியாவை புறக்கணிக்குமாறு மாலத்தீவிடம் கூறவில்லை’ – சீன அரசு பத்திரிகை தகவல் | Never asked them to reject India: China on Maldives ministers remarks row
பெய்ஜிங்: இந்தியாவைப் புறக்கணிக்குமாறு மாலத்தீவிடம் சீனா கூறவில்லை என்று அந்நாட்டு அரசு பத்திரிகையான ‘குளோபல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா – மாலத்தீவு இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு, அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ளார். இந்நிலையில், இந்தியா – மாலத்தீவு சிக்கல் தொடர்பாக குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: “மாலத்தீவை சமமான பங்குதாரராக சீனா கருதுகிறது. மாலத்தீவின் இறையாண்மையை மதிக்கிறது. அதேபோல், மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நட்பு மற்றும் கூட்டுறவை சீனா மதிக்கிறது.
இந்தியாவுடன் நல்லுறவுடன் இருப்பது மாலத்தீவுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை சீனா அறிந்திருக்கிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மோதல் போக்கு நிலவுவதால், இந்தியாவை புறக்கணிக்குமாறு சீனா மாலத்தீவை ஒருபோதும் கேட்கவில்லை. அதுமட்டுமல்ல சீனா, இந்தியா, மாலத்தீவு இடையே முத்தரப்பு ஒத்துழைப்பு நிலவ வேண்டும் என்றும் சீனா விரும்புகிறது.
மாலத்தீவின் புதிய அதிபராக முகம்மது முய்சு தேர்வானதில் இருந்து மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவு ஆரோக்கியமாக இல்லை. வழக்கமாக மாலத்தீவு அதிபராக தேர்வு செய்யப்படுபவர்கள் தங்கள் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்குச் செல்வது வழக்கம். ஆனால், முகம்மது முய்சு இந்தியாவுக்குச் செல்வதற்குப் பதிலாக துருக்கிக்குச் சென்றுள்ளார். புதிதாக ஆட்சிக்கு வரக்கூடியவர்கள், தாங்கள் கையாள வேண்டிய விஷயங்களின் முக்கியத்துவம் மற்றும் அவசரத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறார்கள்” என்று குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.