இஸ்ரேலில் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் பலி: இருவர் காயம் | Indian Man Killed, 2 Others Injured In Missile Attack In Israel
டெல் அவிவ்: இஸ்ரேலில் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர். இவர்கள் மூவருமே கேரளாவைச் சேர்ந்தவர்களாவர். லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேலின் மார்காலியோட் பகுதியில் நேற்று (திங்கள்கிழமை) ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒரு இந்தியர் உயிரிழக்க இருவர் காயமடைந்தனர்.
அக்டோபர் 7, 2023-ஆம் ஆண்டு இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தொடங்கிய போர் இன்னும் நீடித்து வருகிறது. இருதரப்பு போரை நிறுத்தக்கோரி பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும் இன்னும் காசாவில் போர் ஓய்ந்தபாடில்லை.
காசாவின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் இப்போது பஞ்சத்தின் ஆபத்தில் இருப்பதாகவும், மருந்துகளின் பற்றாக்குறை மற்றும் மருத்துவ பராமரிப்பு பற்றாக்குறையால் தொற்று நோய்களின் பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஐ.நா எச்சரித்துள்ளது.
இந்நிலையில், வடக்கு இஸ்ரேலின் மார்காலியோட் பகுதியில் ஒரு விவசாய நிலப் பகுதியில் நேற்று காலை 11 மணியளவில் ஏவுகணைத் தாக்குதல் நடந்துள்ளது என்று மீட்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஜாகி ஹெல்லர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பத்னிபின் மேக்ஸ்வெல் என்று அடையாளம் தெரிய வந்துள்ளது. இஸ்ரேலின் ஜிவ் மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் புஷ் ஜோசப் ஜார்ஜ், பால் மெல்வின் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. புஷ் ஜோசப் ஜார்ஜ் முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்காக சிகிச்சை பெற்று தேறிவருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. அவர் இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தாருடன் தொலைபேசியில் பேசிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெல்வின் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.
இந்தத் தாக்குதலை லெபனானைச் சேர்ந்த ஷைட் ஹெஸ்புல்லா அமைப்பு மேற்கொண்டுள்ளது. இந்த அமைப்பானது கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி முதல் ஹமாஸுக்கு ஆதரவாக அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.